உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை மையமாக் கொண்டு செயல்படும் பத்ரிநாத் கோயிலில் காணிக்கை தொகையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களின் நிர்வாகக் குழு இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக அதிகாரியின் விளக்கம்
இது குறித்து கோயில்களின் தலைமை நிர்வாக அதிகாரியான சோஹன் சிங் ரங்கட் கூறுகையில், “இந்த முறைகேடு புகாரை விசாரிக்கும் குழு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதுடன், தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலம் பெறும். சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், விசாரணை முடிவடையும் வரை உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தின் பின்னணி
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அதில் பெரும் தொகையைத் திருடிய விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைதான அவினாஷ் சுக்லா என்பவர், பெரும் தொகையைத் திருடியதை ஒப்புக்கொண்டதுடன், கோயில் அறக்கட்டளை பொருளாளர் அனில் மிஸ்ராவிற்கும் இதில் பங்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடர் நிகழ்வுகளின் விளைவாக, அறக்கட்டளை பொருளாளர் அனில் மிஸ்ரா மற்றும் செயலாளர் சம்பத் ராய் ஆகியோர் கடந்த வாரம் தனது பதவிகளிலிருந்து விலகினர். இந்த வழக்கை முழுமையாக விசாரிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் இதே போன்ற முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால் நிர்வாகம் அதிர்வடைந்துள்ளதாகத் தெரிகிறது.
