டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்படும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலை கூட்டத்தில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு மற்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை செயலாளர் நெஜாமிபூர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எரிசக்தி பாதுகாப்பில் ஹார்முஸ் ஜலசந்தி
மாநாட்டில் உரையாற்றிய அஜித் தோவல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்பதாகத் தெரிவித்தார். இந்த உடன்படிக்கையை இந்தியா நேர்மறையாகக் கருதுவதோடு, அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு இந்த ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை பங்கிருக்கும் இந்த ஜலசந்தி திறக்கப்படுவதன் மூலம், விநியோகச் சங்கிலியில் நிலவிய தடைகள் நீங்கும் என்றார். இதன் விளைவாக, உரம் மற்றும் ரசாயனத் துறைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் விளக்கினார்.
இணைய பாதுகாப்பு மற்றும் பிரிக்ஸின் பொறுப்பு
உலக நாடுகளின் இணைய பாதுகாப்பு குறித்துப் பேசிய அஜித் தோவல், புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகத் தொழில்நுட்ப ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதற்கான அமைப்புகள் வலுவிழந்திருக்கும் சூழலில், பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம்
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் தனியுரிமை பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மீண்டும் மீட்டெடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் அமைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
