இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடியை தனது நாட்டில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அல்பானீஸ், இந்தியப் பிரதமரின் வருகை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். தனது உரையில் அவர், “நான் இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். தற்போது பிரதமர் மோடியை ஆஸ்திரேலியாவில் வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை இரண்டாவது முறையாகப் பெறுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பொருளாதார உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதையும், இரு நாடுகளின் வர்த்தக உறவுகள் மேம்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினராலும், ஆஸ்திரேலிய மக்கராலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்த இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைதட்டி வரவேற்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
