Tag: திரைப்படத் துறை

  • தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை: நடிகர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை: நடிகர் சங்கம்

    சென்னை: சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

    வேலை நிறுத்த அறிவிப்புக்கு எதிர்ப்பு

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி, அதையே காரணமாக முன்னிறுத்தி மே 2ம் தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிப்பதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

    தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    வாழ்வாதார பாதிப்பு கவலை

    நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த சட்ட விதிகளில் இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை இறுதி செய்து ஒப்படைத்தும், இது நாள் வரை எந்த நகர்வும் இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மறுப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கை

    இதுவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் மறுக்க முடியாது என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

    உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும், முதலீட்டையும் பிரதானமாக பாதிக்கக்கூடிய தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியான பிறகு, இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து தீர்மானிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தயாரிப்பாளர் சங்கத்தின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறான தகவல் எனில் மறுத்து சந்திப்பிற்கு முன் திரும்பப் பெற வேண்டும் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

    #தமிழ் சினிமா #தயாரிப்பாளர் சங்கம் #நடிகர் சங்கம் #வேலை நிறுத்தம் #திரைப்படத் துறை #தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர முடியாது #தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு