தமிழக அரசியல் களத்தில் முதன்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வீழ்த்தியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நிர்வாகிகள் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் 51 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோபிச்செட்டிபாளையத்தில் போட்டியிட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் 82 ஆயிரத்து 612 வாக்குகள் பெற்று, 9வது முறையாக அத்தொகுதியில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட வி.எஸ்.பாபு, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜேசிடி பிராபகர், மயிலாப்பூரில் போட்டியிட்ட வெங்கட் ரமணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்
திருச்செங்கோட்டில் போட்டியிட்ட முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், எழும்பூரில் போட்டியிட்ட ராஜ்மோகன் ஆகியோரும் வெற்றி வாகை சூடினர்.
தூத்துக்குடியில் போட்டியிட்ட நடிகரும், அக்கட்சித் தலைவர் விஜயின் நண்பருமான ஸ்ரீநாத், அமைச்சர் கீதாஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். மதுரை மத்தியில் அமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் சுந்தர் சி-க்கும், தவெக செய்தி தொடர்பாளர் முஸ்தஃபாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முஸ்தஃபா வென்றுள்ளார்.
திமுக அமைச்சர்களை வீழ்த்திய தவெக
தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பலரும் திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை வீழ்த்தியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியல் களத்தில் தவெகவின் வலுவான வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.
