மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்பட்ட தகராறில், அவர்களைத் தாக்கிய கடற்படை பிரிவின் பொறியாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் சவுத்ரி என்பவர், விசாகப்பட்டினம் கடற்படை பிரிவில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது, வெண்ணை உருண்டைக்கல் பாறையின் சறுக்கு பகுதியில், மற்ற சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுப்பதற்கு இடையூறாக ஆஷிஷ் சவுத்ரியும் அவரது குடும்பத்தினரும் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த சக சுற்றுலாப் பயணிகள் அவர்களை அவ்விடத்திலிருந்து நகர்ந்து செல்லுமாறு கேட்டபோது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த ஆஷிஷ் சவுத்ரி, அங்கு இருந்தவர்களைத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் நான்கு பேர் காயம்
இந்த மோதலில் பூந்தமல்லியைச் சேர்ந்த திவ்யா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் மற்றும் தொல்லியல்துறை வளாக தனியார் நிறுவன பாதுகாவலர் நேதாஜி ஆகியோர் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் நான்கு பேரும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட ஆஷிஷ் சவுத்ரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
