உயிரைப் பறித்த ராட்சத பாறை
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில், பீஹாரைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
பெங்களூரு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மடப்பட்டணா பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. அங்கு இன்று அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புதிய கல் உடைக்கும் இயந்திரத்தை (Crusher) அமைப்பதற்காக தொழிலாளர்கள் தரைப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில், ஹிட்டாச்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி கற்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, மலையிலிருந்து ஒரு ராட்சத பாறை உருண்டு வந்து, கீழே பணியிலிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
மீட்புப் பணிகள் மற்றும் பாதிப்புகள்
விபத்து நடந்த சமயத்தில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் அந்த இடத்தில் பணியில் இருந்தனர். பாறை சரிந்த வேகத்தில் அங்கிருந்த ஏழு பேர் அதன் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த காவல் துறையினரும், அவசர மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இன்னும் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிய மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி குவாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோர விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
