தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒவ்வொரு துறைக்கும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை நிதி ஒதுக்கீடாக வழங்குகிறது. இருப்பினும், சில துறைகளில் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருந்ததும், உரிய கண்காணிப்பு இல்லாத காரணத்தால் நீண்டகாலமாக அந்தந்த துறைகளின் வங்கிக் கணக்குகளிலேயே நிதி தேங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறையின் கீழ் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அரசு அமைத்தது. இந்தப் பணிக்குழு பல்வேறு அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்தது.
பணிக்குழுவின் ஆய்வில் வெளிவந்த விவரங்கள்
இந்த ஆய்வின் முடிவில், தி.மு.க. ஆட்சியில் 2021-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2025-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் மொத்தம் 11,526 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இருந்திருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, உள்ளாட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறைகளில் பெரும் தொகையானது பயன்படுத்தப்படாமல் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்கி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததன் மூலமே இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
நிதியை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை
இது குறித்து அரசுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு ரூபாயும் அரசுக்குச் சேர வேண்டும் என்ற நோக்கில், மிகச்சிறிய தொகை மீதமிருந்தாலும் அதை மீட்டெடுக்க சிறப்புப் பணிக்குழு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, பயன்படுத்தப்படாமல் இருந்த மொத்த நிதியும் தற்போது அரசு கருவூலத்தில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், தேவையற்ற நிதி முடக்கங்கள் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
