யஷ்வந்த்பூர் – கண்ணனூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ஈரோடு இரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு யஷ்வந்த்பூர் – கண்ணனூர் எக்ஸ்பிரஸ் இரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அந்த இரயில் நள்ளிரவில் ஈரோட்டைத் தாண்டி திருப்பூரை நோக்கி பெருந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெண் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையின் மேல் பகுதியில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் (38) என்பவர் பயணித்துள்ளார். அப்போது அவர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஓடும் இரயிலிலேயே சத்தமிட்டு மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தார்.
போலீசாரின் நடவடிக்கை
இரயில் கோழிக்கோடு சென்றடைந்ததும், அங்குள்ள இரயில்வே போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு இரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் இந்த வழக்கு ஈரோடு இரயில்வே போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசரனை செய்த ஈரோடு இரயில்வே போலீசார், நேற்று நிஜாமுதீனைக் கைது செய்தனர். கைதான நிஜாமுதீன் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்பதோடு, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

