இந்தியாவில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் இணைய வெளியீடுகள் சட்டவிரோத முறையில் பகிரப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக, குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெலிகிராம் தளத்தில் பரவலாகக் காணப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களின் உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிப்புரிமைச் சட்ட மீறல்
இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப் சட்டத்தின்படி, பதிப்புரிமை மீறல் என்பது ஒரு கடுமையான குற்றமாகும் என்பதை மத்திய அரசு தனது நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை, அரசாங்கம் குறிப்பிட்ட சேனல்களைக் குறிப்பிட்டால் அவற்றை நீக்கும் முறையை மட்டுமே டெலிகிராம் நிறுவனம் பின்பற்றி வந்தது. ஆனால், இனிவரும் காலங்களில் அரசாங்கம் அறிவிக்கும் வரை காத்திருக்காமல், திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை வெளியிடும் குழுக்கள், சேனல்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகளை டெலிகிராம் நிறுவனமே கண்டறிந்து முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்ட எச்சரிக்கை
இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ் டெலிகிராம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்பட இயக்குநர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் காவல்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யக்கூடிய குறைதீர்ப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களால் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாடுகளைச் சந்தித்த டெலிகிராம் செயலிக்கு, தற்போது சினிமா திருட்டு விவகாரத்தில் விதிக்கப்பட்டுள்ள இந்த 15 நாட்கள் கால அவகாசம் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply