மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியின் கொள்கைகளை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு இனி மன்னிப்பு அளிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, கட்சி நிர்வாகிகளிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வெளியேறியவர்களை ‘துரோகிகள்’ என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அரசியலுக்கு எதிராக எச்சரிக்கை
கூட்டத்தில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் அணுகுமுறைகளை கடுமையாக சாடினார். பாஜகவின் செயல்பாடுகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், அடக்குமுறை மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். பல மக்கள் அச்சத்தின் பிடியில் இருப்பதாகவும், வேலைவாய்ப்புகளை இழந்து தங்கள் கனவுகள் சிதைந்து போயுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கட்சி விசுவாசம் குறித்து விளக்கம்
கட்சியை ஒரு தாய்க்கு ஒப்பிட்டுப் பேசிய மம்தா பானர்ஜி, “கட்சி என்பது நம்மை வளர்த்த தாயைப் போன்றது. ஆனால் சிலர் உடல்நலம் சரியில்லாத போது தாயைக் கவனித்துக் கொள்ள மறுப்பதைப் போல, இக்கட்டான சூழலில் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர்” என்று சாடினார். தற்போது வெளியேறியவர்கள் தங்களை தற்காலிகமாகக் காப்பாற்றிக் கொள்ளலாம், ஆனால் எதிர்காலத்தில் மக்களும் தொண்டர்களும் அவர்களிடம் பதில் கேட்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.
ஒன்றுபட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும், கட்சி நிர்வாகிகள் ஓயாமல் உழைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply