ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை நீட்டிப்பது குறித்த இறுதி முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுப்பார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான சலுகைகளை இனி நீட்டிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தது. இது சர்வதேச சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரூபியோவின் இந்தப் பேச்சு புதிய சூழலை உருவாக்கியுள்ளது.
சந்தை நிலவரமே தீர்மானிக்கும்
ஹ்ரைன் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, தற்போதைய உலகளாவிய எரிசக்தி சந்தையின் நிலையை முழுமையாக மதிப்பிட்ட பின்னரே, இந்தச் சலுகைகளை நீட்டிப்பதா அல்லது முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதா என்ற முடிவை அதிபர் டிரம்ப் எடுப்பார் என்று விளக்கினார்.
குறிப்பாக, ஈரானில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ள காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான விலை சரிந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் சந்தை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் இறக்குமதி சாதனை
கெப்லர் கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் ரஷ்ய எண்ணெய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தச் சூழலில், அமெரிக்கா மீண்டும் கடுமையான தடைகளை விதித்தால், சர்வதேச அளவில் பதற்றங்கள் குறைந்த பின்னரும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply