தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அரசியல் விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, மாநிலத்தில் நிலவும் மின்வெட்டுச் சிக்கல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் விஜய் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலுரை வழங்கிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள் குறித்துப் பேசினார். அப்போது டாஸ்மாக் நிதி அரசியல் கட்சிகளுக்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டபோது, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். சபாநாயகர் குறுக்கிட்டு, முதலமைச்சர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், முதலமைச்சர் விஜய் தனது உரையின் ஒரு பகுதியில் ஒரு குட்டிக்கதையை விவரித்தார். வெயிலின் தாக்கம் காரணமாக ஒரு முதியவர் எதையோ தேடிக்கொண்டிருப்பதை சிறுவன் ஒருவன் கவனித்து, “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்க, அதற்கு அந்த முதியவர் “உன் அப்பாவைக் காணவில்லை, அவரைத் தேடுகிறேன்” என்று பதிலளித்ததாகக் கூறினார். எதிர்க்கட்சியினர் செய்வது போலவே தானும் இதுபோன்ற தொடர்பில்லாத கதைகளைச் சொல்ல முடியும் என்பதை உணர்த்தவே இந்தக் கதையைச் சொன்னதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார். “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசி, திரைப்பட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் முதலமைச்சர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், பேரவையின் நேரடி ஒளிபரப்பு கேமராவை சினிமா கேமரா என்று நினைத்து அவர் பேசியதாகவும், குறுக்கீடுகள் இன்றி அதனை ஒரு காட்சியாக எடுத்து வழங்க சபாநாயகர் எடுத்த முயற்சி ஏற்புடையதல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். முதலமைச்சரின் பதிலுரையில் மின்வெட்டு, விவசாயிகள் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்குப் பதில் இல்லை என்றும், வெறும் வசனங்கள் மட்டுமே இருந்ததாகவும் அவர் சாடினார்.
தொடர்ந்து, “குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு எதிரானது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனைத் தேடிய மனைவி பற்றிய கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். எனவே, நடிகர் என்ற அடையாளத்தை விடுத்து, இனி ஒரு முதலமைச்சராக விஜய் நடந்து கொள்ள வேண்டும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply