திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 21-ஆம் தேதி இந்த நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 74 பேர் மயக்கமடைந்து சரிந்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனை சிகிச்சையும் உயிரிழப்புகளும்

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இரண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருவர் அடங்குவர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடரும் உயிரிழப்புகள்

இதற்கிடையில், சென்னை ராஜீவ காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அலத்தி மகாராணா ஜுவாங்கா (19) என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இன்னும் சில தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

#திருவள்ளூர் #விபத்து #அமோனியா #உயிரிழப்பு #amoniaGasLeak #amoniaGas #அமோனியா வாயு #அமோனியா வாயு கசிவு #பலி உயர்வு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *