ஆதார் புதுப்பிப்பு முதல் ரயில் பயணக் கட்டணம் வரை: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்

புதிய விதிகள்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் கட்டணங்களில் ஜூலை 1 முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், வெளியுறவுத்துறை மற்றும் ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளன.

ஆதார் மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பு இனி இலவசம்

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை புதுப்பிப்பதற்கான கட்டண முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுவரை இதற்காக வசூலிக்கப்பட்டு வந்த 75 ரூபாய் கட்டணம் இனி கிடையாது. அதிகாரப்பூர்வ ஆதார் செயலி மூலம் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளும் வசதி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் மற்றும் தட்கல் சேவைக் கட்டண உயர்வு

வெளிநாட்டு பயணங்களுக்கான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைக் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசரத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் தட்கல் திட்டத்தின் கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயண அபராதத் தொகை அதிகரிப்பு

ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 250 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச அபராதத் தொகை, இன்று முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

வங்கி முதலீட்டு மோசடிகளுக்கு முழு இழப்பீடு

வங்கிகளில் மேற்கொள்ளப்படும் காப்பீடு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் போது முறைகேடுகள் நடந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெறவோ அல்லது முழுமையான இழப்பீட்டைக் கோரவோ இனி சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#அரசு விதிகள் #பொதுமக்கள் #கட்டண மாற்றம் #ஜூலை 2026 #ஜூலை 1 புதிய ரூல்ஸ் #எல்பிஜி சிலிண்டர் #யுபிஐ புதிய ரூல்ஸ் #ஏடிஎம் புதிய ரூல்ஸ் #july1RuleChangesIndia #lpgPriceChange

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *