தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் நகைக் கடைகளில் விலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த மே மாதம் போர் பதற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக 2026-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து விலை உயர்வு நீடித்ததால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,16,000 வரை உயர்ந்திருந்தது. இது சாமானிய மக்கள் நகை வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்கச் செய்தது.
தொடர்ச்சியான விலை சரிவு
ஜூன் மாதம் தொடக்கத்தில் விலை ஏற்றத்தாழ்வாக இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக நகை வாங்குவோருக்கு தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 23-ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,08,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 24-ஆம் தேதி கிராமுக்கு ரூ.210 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,350 ஆகவும், சவரன் விலை ரூ.1,06,800 ஆகவும் அமைந்தது.
இன்றைய விலை நிலவரம்
இன்று (ஜூன் 25) 22 காரட் தங்கம் விலை மீண்டும் ஒருமுறை கிராமுக்கு ரூ.210 சரிந்துள்ளது. இதன் படி, ஒரு கிராம் விலை ரூ.13,140 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,05,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.189 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,981 ஆகவும், ஒரு சவரன் ரூ.87,848 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை மாற்றம்
தங்கத்துடன் இணைந்து வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230 ஆகவும், ஒரு கிலோ கிராம் விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply