தமிழக சட்டசபையின் மூன்றாவது நாள் கூட்டத்தொடரில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தீர்மானத்தில் திருத்தம்: அதிமுக எதிர்ப்பு
மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த திருத்தங்களை முதல் அமைச்சர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயல் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. விதிகளுக்குப் புறம்பாக தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றத்தின் தேவை குறித்து அரசு பேசுவது அவசியமற்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
உரிமை மீறல் விவகாரம்
அரசின் தனித்தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப அதிமுக சார்பில் சபாநாயகருக்குக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த விவகாரத்தில் பேச அனுமதி கோரிய அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேச எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஜனநாயக முறைப்படி கருத்துக்களைத் தெரிவிக்க சட்டசபையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மனவருத்தத்துடன் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply