திருவள்ளூர் தொழிற்சாலை அமோனியா கசிவு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

திருவள்ளூர் அமோனியா கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய ஏழு பெண்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த சமயத்தில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த தொழிலாளர்கள் நச்சு வாயுவின் தாக்கத்தால் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

#tamilNaduNews #tiruvallur #industrialAccident #pmModi #ammoniaGasLeak #periyapalayam #modiCondolence #அம்மோனியா வாயு #பெரியபாளையம் #பிரதமர் மோடி இரங்கல்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *