மகாராஷ்டிரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 80 லட்சம் பயனாளிகள் நீக்கம்

மகளிர் உதவித்தொகை திட்டம்

மகாராஷ்டிரா மாநில அரசு செயல்படுத்தி வரும் மகளிர் மாத உதவித்தொகை திட்டத்தில், தகுதியின்மை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு குறைபாடுகளால் சுமார் 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் 21 முதல் 65 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கும் நோக்கில் ‘முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் 2.46 கோடி பயனாளிகள் பதிவு செய்திருந்தனர்.

ஆவணச் சரிபார்ப்பும் இ-கேஒய்சி நடைமுறையும்

திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, பயனாளிகளின் விவரங்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையை மாநில அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் விவரங்களை இணைக்கத் தவறிய சுமார் 80 லட்சம் பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக இவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. அரசின் சீராய்வு நடவடிக்கையில், பல பயனாளிகள் திட்டத்தின் நிபந்தனைகளுக்குத் தகுதியற்றவர்கள் என்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்கள் திட்டத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பயனாளிகளின் எண்ணிக்கை

இந்த அதிரடி சீராய்வுக்குப் பிறகு, திட்டத்தின் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்த 2.46 கோடிப் பெண்களில், தற்போது 1.66 கோடி பெண்களுக்கு மட்டுமே கடந்த இரண்டு தவணைகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 80 லட்சம் பேர் திட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

நீக்கப்பட்ட பயனாளிகளை மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியாது என்றும், தற்போதைய நிலையில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிடவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிற மாநிலங்களின் திட்டங்கள்

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தமிழகத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறையில் உள்ளது. இதேபோல் கர்நாடகாவில் ‘க்ருஹ லட்சுமி’ திட்டத்தின் கீழ் 2,000 ரூபாயும், டெல்லியில் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ மூலம் 2,500 ரூபாயும், அசாம் மாநிலத்தில் ‘உருனொடோய்’ திட்டத்தின் கீழ் 1,250 ரூபாயும் வழங்கப்பட்டு வருகின்றன.

#மகாராஷ்டிரா அரசு #பெண்கள் நலன் #நிதியுதவி #அரசு அறிவிப்பு #மகளிர் மாத உதவித் தொகை திட்டம் #மகளிர் உரிமைத் தொகை திட்டம் #கலைஞர் மகளிர் உரிமைத் தொகை #பெண்கள் உதவித் தொகை #மகாராஷ்ட்ரா #women&#x27

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *