டிஜிட்டல் நையாண்டி இயக்கமாகச் செயல்பட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக ஊடகக் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் ஒரு வழக்கின் விசாரணையின் போது, “சமூக ஊடகங்களில் செயல்படும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போன்றவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர், இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்தச் சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் கணக்கைத் தொடங்கினார். இந்த இயக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டவர்கள் உட்பட ஒரு கோடிக்கும் அதிகமானோர் இக்கணக்குகளைப் பின்தொடர்ந்தனர். இதன் விளைவாக, மத்திய அரசு இந்த டிஜிட்டல் நையாண்டி இயக்கத்தின் கணக்குகளைத் தடை செய்தது.
நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?
தனது எக்ஸ் கணக்கிற்கான தடையை நீக்கக் கோரி அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அபிஜித் தீப்கேவின் வழக்கறிஞர் அகில் சிபல் வாதிடுகையில், “சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் சில பதிவுகள் நீக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று கோரினார். மேலும், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால நிவாரணம் வழங்கிய நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் கருத்து
மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, “மற்ற வழக்குகளுக்கும் இந்த வழக்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கணக்கின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் அநாகரீகமாகத் தெரிகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் எக்ஸ் நிறுவனம் ஆகியோரின் வாதங்களையும் கேட்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
விரிவான பரிசீலனைக்குப் பிறகே இறுதி உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவை அணுகி தீர்வு காணுமாறு மனுதாரருக்கு பரிந்துரை செய்தது.

Leave a Reply