நடிகர் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்த ‘ப்ளாஸ்ட்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் வரும் மே 28-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அர்ஜுனிடம், தமிழக முதலமைச்சராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களைச் சந்தித்த அனுபவம் குறித்துக் கேட்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அர்ஜுன், முதலமைச்சரான பிறகு விஜய் அவர்களைச் சமீபத்தில் சந்தித்ததாகக் குறிப்பிட்டார். அப்போது விஜய் அவர்கள், “அரசியல் களத்தில் நுழைந்த பிறகு பலரும் ‘முதல்வன்’ திரைப்படத்தின் காட்சிகளை மீம்ஸாகப் பகிர்ந்து வருகின்றனர். நான் முதன்முதலாக அந்த உயர்ந்த பதவியின் இருக்கையில் அமர்ந்தபோது, எனக்கு ‘முதல்வன்’ திரைப்படத்தின் நினைவுகளே முதலில் வந்தன” என்று கூறியதாக அர்ஜுன் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர், குறிப்பாகத் தனக்குத் தெரிந்த மற்றும் இணைந்து பணியாற்றிய ஒரு நபர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்றும், முதல் தேர்தலிலேயே இந்த வெற்றியைப் பெற்றது மிகப்பெரிய சாதனை என்றும் பாராட்டினார்.
அரசியல் வருகை குறித்து அர்ஜுன் விளக்கம்
தமிழகத்தில் விஜய் மற்றும் ஆந்திராவில் பவன் கல்யாண் ஆகியோர் அரசியலுக்கு வந்தது போல, கன்னடத் திரையுலகில் அர்ஜுன் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு, “நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது. ஆனால், அரசியலில் ஈடுபடுவது என்பது உள்ளுணர்வுடன் வரவேண்டிய ஒரு விஷயம். எனக்குத் தற்போது அப்படித் தோன்றவில்லை. அரசியலுக்கு வராமல் இருந்தே சமூகத்திற்குத் தேவையான நற்பணிகளைச் செய்ய முடியும்” என்று தனது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் தேர்தல் செலவினங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்துப் பேசிய அவர், “தற்போதைய அரசியலில் அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு நிதி வசதி என்னிடம் இல்லை” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். விஜய் அவர்கள் பெரும் நிதி வசதி இல்லாமல் அரசியலுக்கு வந்தாரே என்ற கேள்விக்கு, “அவர் அளவுக்கு நான் புகழைச் சம்பாதித்ததில்லை” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply